கலாசார சீரழிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு! – கே. வி. குகேந்திரன்

கடந்த கால நிலைமைகளைச் சொல்லி வாக்குக்கேட்டு வந்தவர்களுக்கு வாக்களித்தது நாம் செய்த தவறு தான். அதற்காக எங்களை ஓரங்கட்டி விடவேண்டாம். வருங்காலத்தில் நாங்கள் தெளிவான சிந்தனையுடன் எங்கள் பகுதிக்கான அரசியல் பருவகாலத்தை தேர்ந்தெடுக்கத் தயாரகாகவுள்ளோம் என அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரனிடம் (வி.கே.ஜெகன்) சாவகச்சேரி மறவன்புலவு மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

jegan

சாவகச்சேரி மறவன்புலவு மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அப்பகுதி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு பொருளாதார அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகன் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் முக்கியமாக இருப்பது தமிழ் மக்களை தலைமை தாங்கும் அரசியல் தலைமைகளின் திடமற்ற சுயநலமான போக்குத்தான் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் என்று புலப்படுகின்றதோ அன்று தான் நிரந்தர தீர்வொன்றை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த முப்பதாண்டுகளுக்கு மேல் வடக்கு – கிழக்கு முழுவதும் உள்ளடக்கியதாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டமானது போராடிய அனைத்து அமைப்புகளையும் மையப்படுத்தாது தனி ஒருவரது கைக்குள் சென்றமையால் தமிழ் இனம் வரலாறு காணாத அழிவுகளையும் தோல்விகளையும் சந்திக்க வேண்டியநிலையேற்பட்டது.

போர்க்குற்ற விசாரணையை சர்வதேசம் கொண்டுவருவதன் மூலம் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியையோ தனி நாட்டையோ பெற்றுத்தரப் போவதில்லை. இது ஒரு சர்வதேச கண்துடைப்பு நடவடிக்கை ஆகும். அதை வைத்து போலித் தேசிய வாதிகள் மீண்டும் மக்களைக் குழப்பி தமது சுயநல அரசியலை நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழ்த் தேசியம் என்ற கோசத்தின் மூலம் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த் தலைவர்களது தவறான செயற்பாடுகளால்த்தான் தமிழர்கள் பெறவேண்டிய ஒவ்வொரு அதிகாரத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றோம்.

அடிப்படையில் எதுவித குறிக்கோழும் இல்லாமல் கோசமிடும் கட்சியைக் கொண்டிருக்கும் தேசியம் பேசுபவர்கள் இதுவரை உங்களுக்கான நிரந்தரமான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பதவிகளுக்காக மட்டும் மக்களை பகடைக்காய்களாக வைத்திருப்பதால் தமிழர்களது வாழ்க்கைத்தரம் அடியோடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்த மக்களின் அழிவில் தான் தீர்வு கிடைக்குமென்றால் அப்படிப்பட்ட தீர்வு யாருக்குத் தேவை. உங்கள் பிள்ளைகளை, உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு நீங்கள் நிம்மதியாக இருக்க முடியமா என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். மனமாற்றம் என்ற ஒன்று வரும் வரை தமிழர் வாழ்வில் எதுவும் மாறாது என்பது யதார்த்தமான உண்மை.

குடாநாட்டில் சமூக கலாச்சார சீர்கேடுகள் தலை தூக்கியுள்ள நிலைக்கு கூட்டமைப்பின் சில முக்கிய உறுப்பினர்களே காரணம் என்பதை அண்மைய சாவகச்சேரி வாள் வெட்டுச் சம்பவத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. நீங்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளீர்கள். தொடர்ந்தும் வெட்டிப் பேச்சுக்கும் வீர வசனத்திற்கும் தலை சாயாது கலாச்சாரத்தையும் மக்களையும் பாதுகாக்க அரசியல் ரீதியில் உங்கள் வாழ்வியலுக்கு துணை நிற்பவர்களுக்கு கரம் கொடுத்துத் தூக்கிவிடுங்கள். வெறும் வார்த்தைகளில் மட்டும் குறியாக இருந்து கொண்டு மக்கள் வாழ்வாதாரத்தை சீரழிப்பவர்களை தூக்கியெறிய நீங்கள் தயாராக வேண்டும் – என்றார்.

இச்சந்திப்பில் தென்மராடசி அமைப்பாளர் சாள்ஸ், நகரசபை உறுப்பினர் திருக்குமரன், மெடிஸ்கோ, சமுர்த்தி உத்தியோகத்தர் சயிதா, கிராம சேவகர் சுபாசன் ஆகியோருடன் அப்பகுதி மக்களும் கலந்துகொண்டனர்.

Related Posts