கலக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசிப் பாவனையை நிறுத்துமாறு வேண்டுகோள்

கலக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசிப் பாவனையாளர்கள் உடனடியாக அதன் பாவனையை நிறுத்த வேண்டும் என சம்சுங் நிறுவனமும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

சம்சுங் கலக்ஸி நோட் 7 கையடக்கத் தொலைபேசியில் ஏற்படும் திடீர் வெடிப்புக்கள் மற்றும் தீ விபத்துக்களை அடுத்தே சம்சுங் நிறுவனம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.

ஏற்கனவே கலக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசியில் ஏற்படும் திடீர் வெடிப்புக்களை அடுத்து விமான நிலையங்களிலும், விமானங்களிலும் அதன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்சுங் நிறுவனம் புதிதாக சந்தைக்கு அறிமுகப்படத்திய கெலெக்ஸி நோட் 7 என்ற கையடக்கத் தொலைபேசி தொடர்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து பல புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக குறித்த கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றும் போது வெடித்திருந்தமை தொடர்பான காணொளிகள் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த செப்டெம்பர் மாதம் 2 தசம் 5 மில்லியன் கெலெக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசிகளை சம்சுங் நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.

அத்துடன் குறித்த தொலைபேசியின் பாவனைக்கு சர்வதேச ரீதியாக பல விமான நிலையங்களில் தடை விதிக்கப்பட்டிருந்ததடன் பயணிகள் நோட் 7 கையடக் தொலைபேசிகளை விமானங்களில் உபயோகிக்கவும் வேண்டாம் என உத்தரவிடப்பட்டது.

இதனால் சம்சுங் கையடக்க தொலைபேசிகளின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நிறுவனத்தின் பங்குகளும் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இந்த நிலையில் சம்சுங் நிறுவனத்தின் மேலாளர், பாவனையாளர்களின் பாதுகாப்பு தமக்கு மிகவும் முக்கியம் என்ற காரணத்தினால் குறித்த வகையான கையடக்க தொலைபேசிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை கெலேக்ஸி நோட் 7 என்ற கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை கெலேக்ஸி நோட் 7 என்ற கையடக்க தொலைபேசி விற்பனையையும் முழுமையாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அதிகாரி, இது தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

கெலேக்ஸி நோட் 7 தொலைபேசிகளை மின் ஏற்றும் போது தீபற்றியதாக தெரிவித்ததை அடுத்து மாற்றீடாக கொடுத்த கையடக்கத் தொலைபேசிகளிலும் தீபற்றியதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

வாடிக்கையாளர்களின் இந்த முறைப்பாடுகளை அடுத்தே கெலேக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசிகள் ஆபத்தானவை என தெரிவித்து குறித்த கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் சம்சுங் நிறுவனம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

Related Posts