நவக்கிரி சரஸ்வதி வீதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை மோதிப் பலியாக்கியதாகக் கூறப்படும் டிப்பர் ரக வாகனச் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.
கொக்குவில் மேற்கைச் சேர்ந்த 52 வயதுடைய டிப்பர் ரக வாகனச் சாரதியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சரஸ்வதி வீதியில் நின்றிருந்த, கசிந்திரன் சுபாசினி (வயது 25) என்ற கர்ப்பிணிப் பெண்ணை மேற்படி டிப்பர் வாகனம் வியாழக்கிழமை (28) காலையில் மோதியது.
இதில், அந்தப் பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து டிப்பர் வாகனத்தை தீயிட்டிக் கொளுத்தினர். சாரதி வாகனத்தை விட்டு தப்பித்து ஓடியிருந்தார்.
இந்நிலையில், அங்கு சென்ற பொலிஸார், தீயிட்டுக் கொளுத்தியவர்களைத் விரட்டியதுடன், தப்பித்துச் சென்ற சாரதியையும் கைது செய்தனர்.
சாரதியை, மேலதிக நீதவானின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (28) மாலை ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.