கர்ப்பிணிகளே அவதானம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இம் மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப் பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் காய்ச்சல் தொடங்கிய முதல் நாளிலேயே அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதால் தகுந்த சிகிச்சையினைப் பெற்றுக் குணமடைந்துள்ளனர்.

எனவே எந்தவொரு கர்ப்பிணிக்கோ அல்லது சிசுவை பிரசுவித்த தாயாருக்கோ காய்ச்சல் ஏற்படின், உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அத்துடன் பன்றிக் காய்ச்சல் தொற்றானது குறைவடையும் வரையில் கர்ப்பவதிகள் சனங்கள் கூடும் இடங்கள், பேரூந்துப் பயணங்கள், புகையிரதப் பயணங்கள் போன்றவற்றையும், இந்த நோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றையும் தவிர்ப்பதால் நோய் தொற்றுவதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக வருகைதரும் பொது மக்களுக்கு உடனடியாக உதவும் வகையிலும் ஏனையவர்களுக்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் காய்ச்சல் நோயாருக்கான விசேட வெளிநோயாளர் சேவைப் பிரிவானது 26.02.2017 அன்றில் இருந்து இயங்கவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கர்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடவும். அங்கிருந்து மாவட்ட பொதுமருத்துவமனைக்கு உங்களை பாதுகாப்பாகவும் உடனடியாகவும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு உங்களது குடும்பநல உத்தியோகத்தரையோ அல்லது பொதுச் சுகாதார பரிசோதகரையோ நாடவும்.

Related Posts