கரையோர மக்களை காப்பாற்றுங்கள்! : ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் அவசர கடிதம்

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வேறு மாவட்டங்களில் இருந்து வடக்கிற்கு படையெடுக்கும் மீனவர்கள், தமது கரைவலைத் தொழிலுக்கு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 400இற்கும் அதிகமான உழவு இயந்திரங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டு மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, செழுமையான வளங்களைக் கொண்ட 70 கிலோமீற்றர் வரையான கடற்கரை அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு உழவு இயந்திரத்தை தொடர்ந்து இயக்குவதால் கடற்கரை குன்றும் குழியுமாக காணப்படுவதோடு, கடல் வளங்கள் அழிக்கப்படுவதாகவும், சிறிய மீன்கள் உணவின்றி இறப்பதாகவும், உள்ளூர் மீனவர்களின் தொழிலும் பறிபோவதாகவும் சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

வெளிமாவட்ட மீனவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான உழவு இயந்திர முறையைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாக அல்லது விரும்பாதவர்களாகவே வடக்கில், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரிகள் காணப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் சிவநேசன் முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பானவர் என்ற ரீதியில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென சிவநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்த கெடுபிடிகளால் அரச நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருந்த அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான அவசர தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் வரும் திணைக்கள அதிகாரிகள் மூலம், பாரபட்சமற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

இக் கடிதத்தின் பிரதிகள், மத்திய மீன்பிடி அமைச்சர், வடக்கு முதலமைச்சர், வடக்கு ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Posts