கரையோரமும், காணியும் மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாண வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மயிலிட்டி, ஊறணி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், அதுமட்டுமன்றி 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் நடை முறைப்படுத்தப்படும் தேசிய நல்லிணக்கவாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (14) ஊறணி பகுதியில் வைத்து குறித்த நிலம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனிடம் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானசோதியினால் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் (2016) ஊறணி, காங்கேசன்துறை, தையிட்டி தெற்கு உள்ளிட்ட சில பகுதிகள் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதி மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலை செய்வதற்கு கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கரையோர பகுதியை விடுவித்து வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.சிவமோகனன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts