யாழ். மாவட்ட கரையோரப் பகுதிகளில் கடற்தாவர வளர்ப்புத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடற்பாசி (இச்சூமியா) எனப்படும் கடற்தாவரம் வளர்க்கும் திட்டம் நேற்றய தினம் மாவட்டச் செயலகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதன்பிரகாரம் மாவட்ட கரையோரப் பகுதிகளில் 292 கிலோமீற்றர் நீளமான பகுதியில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதில் கருத்துரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கரையோர வளங்களை பாதுகாத்து மேம்படுத்த இத்திட்டம் பேருதவியாக இருக்கும். இதனூடாக மீன்பிடித் தொழிலையும் பெருக்கிக் கொள்ளவும் அதுசார்ந்த உற்பத்திகளை அதிகரிக்கவும் வசதியாக இருக்கும்.
அத்துடன், இதனை தொழிலாக மட்டுமல்லாமல் அர்த்தபூர்வமானதாகவும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அமையப் பெறுவதுடன், இத்திட்டத்திற்கு பட்டதாரிப் பயிலுனர்கள் வழிகாட்டிகளாக இருந்து செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது மாவட்ட அரசாங்கம் அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம், தேசிய விவசாய அபிவிருத்தி சபை பணிப்பாளர் திருமதி அசோகா ஆகியோர் உடனிருந்தனர்.