கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை சுத்தம் செய்வதற்கு, கரைச்சி பிரதேச சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியிலிருந்து, இரணைமடு சந்தி வரையான ஏ9 வீதியில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய நிலையில் குப்பைக்கூலங்கள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன.
குப்பைக்கூலங்கள் காணப்படும் பகுதிகளுக்கு அண்மித்தவாறு குடியிருப்புக்கள் காணப்படுகின்ற நிலையில், குப்பைகளை அகற்றுவதில் கரைச்சி பிரதேச சபை அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பருவ மழையும் பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில், நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் மக்கள், பாரிய நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கு முன்னர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.