கருத்தடை குறித்து பாதிக்கப்பட்ட எவரும் முறைப்பாடு செய்யவில்லை – த.கனகராஜ்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் இதுவரை யாரும் முறைப்பாடு செய்யவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

human-kanakaraj

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 50 பேருக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அதில் கருத்தடை செய்து கொண்ட கிளிநொச்சி மலையாள்புரத்தை சேர்ந்த சதீஸ்குமார் மஞ்சுளா (வயது 26) என்னும் பெண் கடந்த மாதம் 30 ம் திகதி உயிரிழந்திருந்தார்.

இச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கிடைக்க பெற்றுள்ளதா என வினாவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

´கடந்த செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டாய கருத்தடைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்த செய்திகள் தொடர்பாகவும் கடந்த மாதம் எம்மால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகளின் சந்திப்பில் கருத்தடை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சு, ஆகியோரிடம் அறிக்கை கோரியுள்ளோம்.

ஆனால் இதுவரைக்கும் எமக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் யாரும் முறைப்பாடு செய்யவில்லை. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை நான் கிளிநொச்சி அலுவலகத்திற்கு செல்வேன். பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அங்கு வந்து முறைப்பாடு செய்ய விருப்பின் முறைப்பாட்டை பதிவு செய்யலாம்.

கருத்தடை செய்து கொண்ட பெண் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார் என ஊடகங்களில் வெளியான செய்திகளின் மூலம் அறிந்து கொண்டேன். அது தொடர்பாகவும் அறிக்கை கோரியுள்ளோம்.

ஆனால் இதுவரை அந்த பெண் உயிரிழந்தது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை´ என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழப்பு

வன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

Related Posts