கருணாநிதி விரைவில் குணமடைய மைத்திரிபால சிறிசேன பிரார்த்தனை!

கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து கடிதத்தை திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கையளித்துள்ளார்.

தமிழகத்தின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மத்திய, ஊவா மாகாண அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான் ஆகியோர் நேற்று (திங்கட்கிழமை) மாலை காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுதிய வாழ்த்து கடிதத்தையும் அவர்கள் ஸ்டாலினிடம் கையளித்துள்ளனர்.
உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் ஆறுமுகன் தொண்டமான் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related Posts