Ad Widget

கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் மோதல்

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

pakistan-airport

இதேவேளை, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை எதிர் தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் விமான நிலையத்தின் சுற்றுப்பகுதியில் உள்ள கட்டிடத்திலிருந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர். அங்கிருந்து சோதனைச் சாவடியின் இரண்டாவது அறையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் நீடித்த மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், சிலர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தீவிரவாத தாக்குதலை அடுத்து விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தப்பித்து சென்ற தீவிரவாதிகள், கராச்சி நகரில் மட்டுமே பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதால், பாகிஸ்தான் இராணுவ விமானம், தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.

கராச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கராச்சியில் நடந்துள்ள இந்த 2ஆவது தாக்குதல் சம்பவத்திற்கும் தெஹ்ரீக் – இ – தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இவர்கள் விமானங்களை தகர்க்கும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதலை அரங்கேற்ற வந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

Related Posts