பாதுகாப்பு அமைச்சினால் யாழ்.மாவட்டத்தின் கரவெட்டி பிரதேச செயலக பிரிவிலுள்ள் 1350 இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் அவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டதாக நல்லிணக்க மைய ஆணையாளர் எஸ்.செல்வா தெரிவித்தார்.
பதிவு செய்வதற்காக 2000க்கும் அதிகமானவர்கள வருகை தந்திருந்த போதும் அவர்களில் 1350 பேருக்கு மாத்திரம் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதும் மாதாந்தம் 30,000 ரூபா வேதனம் வழங்கப்படவுள்ளதுடன், ,இந்த வேலை வாய்ப்புக்கள்,இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனடிப்படையில் மருத்துவதாதி, நடனபாட ஆசிரியர், சங்கீத பாட ஆசிரியர், ஆங்கில பாட ஆசிரியர், வாத்தியக் கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுதுநர்கள், அலுவலர்கள், கணினி ,இயக்குநர், விவசாய மேற்பார்வையாளர், விவசாய அலுவலர்கள், மின்னிணைப்பாளர், தச்சு வேலை, மேசன், வர்ணம் பூசுபவர்கள், ஒட்டு வேலை செய்பவர்கள், வாகனம் திருத்துவர்கள், வாகன வேலை செய்பவர்கள், வாகனத்திற்கு வர்ணம் பூசுபவர்கள், கூலி ஆட்கள், மற்றும் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட வேலைகளுக்கே ஆட்கள் சேர்க்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதற்காக இளைஞர் யுவதிகளிடமிருந்து பதிவுகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களின் பத்திரங்களின் மூலப் பிரதிகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, இது குறித்து தங்களுக்கு அறிவிக்கவில்லையென தெரிவித்தார்.