கரவெட்டி செல்வபுரம் பகுதிக்கான குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

8423484504_0e39115cacகரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதிக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இம்மாதம் 27ம் திகதி இடம்பெற்றது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜிஏ சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்கள். அதிதிகள் மங்கள வாத்தியம் சகிதம் நீர் தாங்கி அமையப்பெற்றுள்ள இடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பெயர்ப் பலகையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோரால் திரைநீக்கம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து நீர்விநியோகத்தையும் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தனர்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் மேற்படி நீர்விநியோகத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபையினால் குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் 1.8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இச்செயற்திட்டத்தின் ஊடாக அப்பகுதியிலுள்ள செல்வாபுரம், மணல்பாதி, களுக்கை, மணியகாரத் தோட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500 ற்கும் அதிகமான மக்கள் பயன்பெறவுள்ளனர்.

இப்பகுதியின் இளங்கோ சனசமூக நிலைய கட்டுமாணப் பணிகளுக்காக 5 இலட்சம் ரூபாவை நிதியுதவி வழங்க ஆளுநர் உறுதியளித்தார். அத்துடன் இங்கு மேற்கொள்ளப்படவேண்டிய ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளான பாதைப் புனரமைப்பு தொடர்பான திட்டமதிப்பீடு கிடைத்ததும் அதற்குரிய நிதியும் ஒதுக்கீடு செய்து தருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பி.ஜெயகரன், கரவெட்டி பிரதேச செயலர் சி.சிவசிறி, உட்பட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts