கம் உதாவ நிகழ்ச்சித் திட்டம் மீண்டும்!

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘கம் உதாவ’ (கிராம எழுச்சி) நிகழ்ச்சித் திட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் சில தேர்தல் தொகுதிகளில் கம் உதாவ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 1980 களில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாட்டின் நாலாபுறமும் வாழும் மக்களை நெருங்கும் பொருட்டு கம் உதாவ நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து நடாத்திச் சென்றது.

குறிப்பாக வறிய மற்றும் குறைந்த சிறப்புரிமைகளைக் கொண்டுள்ள மக்களை நெருங்கி அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான புதிய உபாயமுறையொன்று அமுல்படுத்தப்பட்டு இத்திட்டத்தினூடாக நிறைவேற்றப்படுவதே இதன் பிரதான குறிக்கோளாக இருந்தது.

அதேவேளை தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்தை அடிப்படையாக வைத்து கம் உதாவ கண்காட்சியும் நடத்தப்பட்டது. எவ்வாறாயினும் 1990 ஆம் தசாப்தத்தின் நடுப்பகுதியில் இந்த நவீனமயப்படுத்தும் உபாயமுறை மற்றும் மேற்படி உபாயமுறையின் அத்தியாவசிய கூறு ஒன்றாக காணப்பட்ட கம் உதாவ கண்காட்சி கைவிடப்பட்டது.

மனிதக் குடியிருத்தி அபிவிருத்தியை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட “கம் உதாவ” எனும் இணைந்த அபிவிருத்தி முயற்சி மற்றும் அதனுடன் இணைந்ததாக நடாத்தப்பட்ட கம் உதாவ கண்காட்சியை இவ்வருடத்தில் இருந்து சில தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கும் வகையில் மீண்டும் ஆரம்பிக்க வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Posts