கமல் ஹாசனுக்கு விழா எடுக்க கமல் தலைமையிலேயே அமைச்சரிடம் மனு!!

தமிழ் சினிமா எம் ஜி ஆர், சிவாஜி என்கிற இரு ஆளுமைகள் நடித்துக் கொண்டிருந்த போது தங்களுக்கென்று ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள். அதைத் தாண்டி தங்களுக்கு பாராட்டு விழா நடத்தவோ, பட்டங்கள் வேண்டியோ மத்திய மாநில அரசுகளிடம் மனு கொடுத்ததில்லை. இதற்காக திரையுலகின் சங்கங்கள், அமைப்புகளை தங்கள் வசதிக்கு வளைத்துக் கொண்டதுமில்லை.

வாரக் கடைசியில் சொந்த வேலையாக சென்னை வருவது மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவின் பழக்கம். அவருக்கு ஆயிரம் தனிப்பட்ட வேலைகள் சென்னையில் உண்டு. அப்படித்தான் நேற்று முன்தினம் சென்னை வந்த நாயுடு, திரைப்பட துறையினர் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இது போன்ற ஏராளமான கூட்டங்கள் கடந்த காலங்களில் சென்னையில் நடைபெற்றுள்ளன. அப்போது எடுக்கப்பட்ட எந்த முடிவும் அமல்படுத்தப்பட்டதில்லை.

தமிழ் சினிமா துறையினர் சார்பில் கமல் ஹாசன் தலைமையில் வெங்கய்யா நாயுடுவிடம் கொடுக்கப்பட்ட மனுவில், ‘செவாலியே விருது பெற்ற கமலஹாசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விழா எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. “தகுதி இல்லாதவர்களும், ஆளுமைத்தன்மை இல்லாத நபர்களும் தலைமை பொறுப்புக்கு வந்தால் இது போன்ற காமெடிகள் அடிக்கடி நடக்கும்,” என்று கமெண்ட் அடிக்கிறார் மூத்த தயாரிப்பாளார் ஒருவர்.

கமல் நல்ல நடிகர்தான். அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டியது நடிகர் சங்கம். அமைச்சரிடம் தங்கள் துறை சம்பந்தமாக மனு கொடுக்க பிரதமருடைய அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கலாம். கமல் தலைமையில் கமலுக்கு விழா எடுக்க மனு கொடுப்பது அநாகரிகமானது. ‘இதன் மூலம் தமிழ் சினிமா தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த கமல் நடத்திய நாடகம் இது’ என்கிறார் கமலுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர்.

மேலும் அவர் கூறுகையில், “தயாரிப்பாளர், நடிகர் சங்கங்களுக்கு யார் பொறுப்பில் இருந்தாலும் அரசுடனான சந்திப்புகளில் ரஜினி – கமல் முன் நிறுத்தப்படுவார்கள். ரஜினிகாந்த் கூச்ச சுபாவம் உள்ளவர். இது போன்ற பொது விஷயங்களில் தலையிடுவதில்லை. ஆனால் கமல் இந்தச் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சியின் தொடக்கமே தனக்கு விழா எடுக்க தமிழ் திரையுலகம் சார்பில் மனு கொடுக்க கூறி அதற்கு அவரே தலைமை தாங்கிய காமெடி நேற்று நடந்தது,” என்கிறார்.

தமிழ் சினிமா தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவதற்கு பிரதான காரணம் நடிகர்களின் சம்பளம். இதனை சரிப்படுத்த தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் விஷால் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவருக்கு ஆலோசனை கூறி வரும் ஞானகுரு கமல் சம்பளமும் குறைக்கப்பட வேண்டும் என்பதால் நடிகர்கள் சம்பளம், தயாரிப்பு செலவு அதிகரிப்பு இவைகளை திசை திருப்ப நடிகர்கள் நடத்தும் நாடகமே கலந்தாய்வுக் கூட்டம் என்பது.

சந்துல சிந்து பாடுவது என்கிற பழமொழி போல ‘கிடைக்கிற கேப்ல எல்லாம் தமிழ் சினிமா என் தலைமையில, என் கட்டுப்பாட்டுல’, என்பதை அவ்வப்போது கமல் உறுதிப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும் என்கின்றார்கள், இந்த புதிய நிர்வாகத்தைக் கவனித்து வரும் திரைப்பட துறையினர்.

Related Posts