நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு புட் பாய்சன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் அவரும் கெளதமியும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் 11 மணியளவில் கமல்ஹாசன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கமல்ஹாசனுக்கு புட் பாய்சன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியுள்ளார்.
அதேசமயம் நாளை முதல் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் நிகில் முருகன் கூறியுள்ளார். தொடர்ந்து கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை தொடர்வதாக கூறப்படுகிறது. இன்று மாலை அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சென்னையில் நடந்த ஐ பட விழாவில் கமல்ஹாசனும் பங்கேற்பார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் உடல் நலப் பிரச்சினை காரணமாக அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.