நடிகர் கமல்ஹாசன் தனது பெயரில் செயல்பட்ட ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார். இதன் மூலம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் கமல்ஹாசனை ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் தூதராக நியமித்தார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்களை வைத்து சென்னை அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை நேரில் சென்று சுத்தம் செய்தார். தமிழகம் முழுவதும் ரசிகர்கள் தூய்மை பணிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், ‘வாழும் கலை’ அமைப்பை நடத்திவரும் ஆன்மீக குரு ரவிசங்கர் மரியாதை நிமித்தமாக கமல்ஹாசனை சந்திக்க அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று, கமல்ஹாசன் பெங்களூரு சென்று ரவிசங்கரை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
பின்னர் ரவிசங்கர் கூறும்போது,
‘நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலம் பல ஆண்டுகளாக தொடர்ந்து சமூக சேவை பணிகளை செய்து வருகிறார். ஒரு தமிழரான அவரை ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு தமிழ் நாட்டின் தூதராக நியமித்தது சிறப்புக்குரிய செயலாகும்’ என்றார். அதன்பிறகு கமல்ஹாசன் டெல்லி சென்று ‘தூய்மை இந்தியா’ திட்ட தூதர்களுக்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
டெல்லியில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும், கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இருவரும் திரைப்பட தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர். டெல்லியில் சினிமா தொழில் முன்னேற்றத்துக்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கமல்ஹாசனிடம், கெஜ்ரிவால் விளக்கினார். டெல்லியில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கும், இந்திய திரைப்பட தொழில் கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கும் அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.