Ad Widget

கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தமிழ் வர்த்தக சங்கம் என்ற அமைப்பும், சோழநாச்சியார் பவுண்டேஷன் என்ற அமைப்பும் இணைந்து உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இதற்கான விழா மயிலாப்பூர் ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவில் தமிழக கவர்னர் ரோசையா கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.

kamal-award

பின்னர் அவர் பேசியதாவது: எனக்கு சினிமா பற்றி அதிகமாக தெரியாது. அதிகமாக சினிமா பார்ப்பதும் இல்லை.
என் தாய்மொழியான தெலுங்கில் வரும் சில படங்களை பார்ப்பதுண்டு. கமல்ஹாசன் நடித்த தெலுங்கு படங்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன். அவை திரும்ப திரும்ப பார்க்க தூண்டுபவையாக இருக்கும் சில படங்களை மூன்று முறை பார்த்திருக்கிறேன்.

கமல்ஹாசனுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர் இன்னும் அதிக படங்களில் நடித்து, அதிக சாதனை படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு கவர்னர் பேசினார்.

விருதை பெற்றுக் கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:

நான் தனி மனிதன் அல்ல. எனக்கு கற்றுக்கொடுத்த வாத்தியார்களின் கலவை நான். கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், ஆர்.சி சக்தி உள்ளிட்ட ஆசியர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கீங்களே வாங்க உங்கள் சாதனையை பாராட்டி விருது தருகிறோம் என்று நீங்கள் அழைத்து வரவில்லை. இந்த விழாவுக்கு கூட எனது ஷூட்டிங்கை நிறுத்திவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அந்த வாய்ப்பை வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி.

இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற உறுதியை வாங்கிக் கொண்டு இந்த விருதை வழங்கியிருப்பதாக நினைக்கிறார். அதையே நானும் செய்வேன்.இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

விழாவில் பிரிட்டீஷ் துணை கமிஷனர் பரத்ஜோஷி, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், ஆர்.சி.சக்தி ஆகியோர் பேசினார்கள். முன்னதாக தமிழ் வர்த்தக சபை தலைவர் சோழநாச்சியார் ராஜசேகர் வரவேற்க, முடிவில் நீதிபதி ஜெகதீசன் நன்றி கூறினார்.

Related Posts