நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், அவை நடவடிக்கையில் பங்குகொள்ளாமல் இருப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் அவருக்கு விடுமுறை வழங்குவதற்கு வடமாகாண சபை இன்று வியாழக்கிழமை அனுமதியளித்தது.
தனக்கு விடுமுறை வழங்குமாறுகோரி வடமாகாண சபையின் தலைவர் கந்தையா சிவஞானத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தினை சபையின் அனுமதிகோரி அவர் அவைக்கு வாசித்துக் காட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ‘கண்டவாறு விடுமுறை வழங்கமுடியாது என்றும் இந்த விடுமுறையினை அனுமதிக்க வேண்டாம்’ எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது எழுந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவருக்கு இருக்கும் சட்டச் சிக்கல்கள் காரணமாக அவரது விடுமுறையை ஏற்று அவருக்கு விடுமுறை வழங்க அனுமதிப்போம் எனக்கேட்டுக்கொண்டார்.
இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் சபையின் அடுத்த அமர்வின்போது கமலேந்திரன் கலந்துகொள்ளாவிட்டால் அது தொடர்பாக அவர் ஒரு முடிவினை சபைக்கு அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே நாம் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற முடிவினை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்தே எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் சபையமர்வில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு விடுமுறை வழங்க சபை அங்கீகாரமளித்தது.
எதிர்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் அவைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நான் விசாரணைக் கைதியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளேன். வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதியினை எனக்கு வழங்குமாறு எனது வழக்கறிஞர் முடியப்பு ரெமீடியஸ் நீதவானிடம் கோரியிருந்தார்.
இருந்தும் 11.12.2013, 31.12.2013 ஆகிய தினங்களில் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதும் அதற்காக அனுமதியினை நீதிமன்றம் எனக்கு வழங்கவில்லை.
எனினும் இன்று 09ஆம் திகதி என்னை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் வேளையில் எனக்கு அனுமதி கிடைக்கும் என நினைக்கின்றேன். அவ்வாறு அனுமதி கிடைத்தாலும் நான் இன்றைய வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்வது என்பது சிரமமானது.
ஏனெனில், சில சட்ட ரீதியான பாதுகாப்பு விடயங்கள் எனக்கு செய்யப்பட்ட பின்னரே என்னால் அமர்வுகளில் கலந்துகொள்ள முடியும்.
ஆகவே இன்றைய அமர்வில் கலந்துகொள்ள முடியாமையினால் எனக்கு விடுமுறை வழங்கும் படி தாழ்மையுடன் சபையிடம் கேட்டுகொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.