மும்பையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அமீர்கான் பேசும்போது, கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்துக்கு 2013–ல் பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது. அப்போது கமலுக்கு ஆதரவாக நான் இருந்து இருக்க வேண்டும். வேறு பணிகளில் பிசியாக இருந்ததால் அதை தவறவிட்டு விட்டேன். இதற்காக வெட்கப்படுகிறேன். கமலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
திரைப்படங்களுக்கு தடை விதிப்பது சரியான அணுகுமுறை அல்ல. தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகும் படத்தை தடை செய்வது கூடாது.
தணிக்கை சான்று பெற்ற படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் போய் பயமின்றி பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்வது, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். தணிக்கை குழு அனுமதி பெற்ற படங்களை நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
தணிக்கை குழுவினர் சில குறிப்பிட்ட வார்த்தைகளை பட்டியலிட்டு அவற்றை திரைப்படங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். இதை நான் எதிர்க்கிறேன். சினிமாவிலும், பத்திரிகைகளிலும் வெளியாகும் எந்த ஒரு விஷயத்தையும் தடை செய்யக்கூடாது. இவ்வாறு அமீர்கான் கூறினார்.