அமெரிக்கா செல்வதற்கு முன், கபாலி படத்தை முழுமையாக பார்த்த ரஜினி, அவருக்கே உரிய பாணியில், படம் ச்சும்மா அப்படியே பிரமாதமா வந்திருக்கு என, கைகளை அகல விரித்து சொல்லி சந்தோஷப்பட்டார் என்று, கபாலி பட தயாரிப்பாளர் எஸ்.தாணு பேட்டியளித்தார்.
கபாலி படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பட வெளியீடு போன்ற பரபரப்பான சூழ்நிலையில் இருந்த போதும், தினமலர் நாளிதழுக்காக விசேஷமாக பேட்டியளித்தார்.
கபாலி படத்தை பற்றி, இதுவரை வராத தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவரது பேட்டியிலிருந்து…
கபாலி எப்படி வந்திருக்கிறது?
படம் பிரமாதமாக வந்திருக்கிறது. அதற்காக, அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஒவ்வொரு பிரேமும், அவரது ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும். குழந்தைகள், குடும்பத்துடன் அமர்ந்து, சந்தோஷத்தோடு பார்க்கும்படியாக படம் வந்துள்ளது.இளம் கபாலியாக, அவர் தலைமுடியை கோதியபடி, வேகமாக நடப்பது போன்ற ஒரு காட்சி, டீசரில் வந்து, வரவேற்பை பெற்றுள்ளது. உண்மையில், அந்த காட்சியை எடுக்கும் போது, அவருக்கு கடுமையான காய்ச்சல். படப்பிடிப்பையே நிறுத்தி விடலாம் என கூறியபோது, அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி, தன் வேதனையை மறைத்து, அவருக்கே உரித்தான, வேகமான ஸ்டைலில் நடித்துக் கொடுத்தார். படத்தின் டீசரில் வெளியான, நான் கபாலிடா என்ற, பஞ்ச் வசனத்தை பார்த்தும், கேட்டும் கொண்டாடும் அவரது ரசிகர்களுக்கு, ஒரு தகவல். இதைவிட, இன்னும் ஆழமான, நீளமான, உணர்வுப்பூர்வமான, பஞ்ச் டயலாக் ஒன்று உள்ளது. அதை, தியேட்டரில் கேட்கும் போது, ரொம்பவும் சந்தோஷப்படுவீர்கள்.
படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியங்கள்…
அவர், யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என நினைப்பார். அப்படி ஒரு மாமனிதர். இதற்காகவே ஜனசந்தடி இல்லாத இடமாகப் பார்த்து தான், படப்பிடிப்பை நடத்தினோம். அப்படி தான், மலேஷியாவில் உள்ள ஒரு காட்டிற்குள் படப்பிடிப்பிற்கு சென்ற போது, நல்ல மழை. அந்த மழையிலும் நனைந்தபடி, அவரை பார்க்க, 2,000 ரசிகர்கள் நின்றனர். இப்படி நம்மை பார்க்க, மழையில் நனைந்தபடி நிற்கின்றனரே… என பதறிப் போன ரஜினி, அவர்கள் பக்கத்தில் சென்று கும்பிட்டு, கையை ஆட்டி, போய் வாருங்கள்… என்று சொல்லி, காட்டுக்குள் படப்பிடிப்பிற்கு சென்றார்.மழையில் ஒதுங்கக் கூட இடம் இல்லை. ஆகவே, அவரை பார்த்த திருப்தியுடன், ரசிகர்கள் போய் இருப்பர் என்று நினைத்தபடி, மாலையில் படப்பிடிப்பை முடித்து திரும்பும் போது பார்த்தால், அதே, 2,000 பேருடன், இன்னும், 3,000 பேர் சேர்ந்து 5,000 பேராக நின்று கொண்டு இருந்தனர். அதைப் பார்த்து நெகிழ்ந்து போனார்.
படத்தின் பிரம்மாண்டம் பற்றி…
படமே பிரம்மாண்டம் தான். படத்தில் வரும், ஒரு காட்சிக்காக தாய்லாந்தில் உள்ள கேளிக்கை நிறைந்த தெருவில், படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். ஆனால், அந்த தெருவில் ஆட்கள் இல்லாத சூழ்நிலையே ஏற்படாது என்ற நிலையில், சென்னையில் அதேபோன்ற, செட் போட்டு எடுத்ததுடன், அத்தெருவில் நிற்க தேவையான, 500 வெளிநாட்டு ஆட்களை அழைத்து வந்து படப்பிடிப்பில் நிறுத்தினோம். இதுபோல, பல காட்சிகள் பல பிரம்மாண்டம்.
வெளிநாடுகளில் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது?
உலகில் எந்த படத்தின், டீசருக்கும் இல்லாத வரவேற்பு, இப்படத்திற்கு கிடைத்துள்ளது. ஒரு மாதத்தில், இரண்டு கோடி பேர் பார்த்துள்ளனர். டீசர் வெளியான சில நொடிகளில், லட்சம் பார்வையாளர்கள் குவிந்ததால், இணையமே திணறியது.இது ஒரு இந்தியப் படம் என்பதை தாண்டி, சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படும் படமாகி விட்டது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் படம் வெளியாகிறது. இதுவரை, தமிழ் படங்களே வெளியாகாத இத்தாலி மற்றும் போலாந்து போன்ற நாடுகளில் கூட, படம் வெளியாகிறது.பிரான்சில், ரஜினிக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள புகழ் பெற்ற புராதனமான, 2,800 பேர் உட்கார்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான, பாரீஸ் ரெக்ஸ் திரையரங்கில், முதல் முறையாக, கபாலி படம் திரையிட இருக்கிறது இது, தமிழ் சினிமா உலகிற்கே கிடைத்த பெருமையாகும்.
பாடல்கள் பற்றி…
இன்றைக்கு அனைவரிடமும் வைரலாக பரவியிருக்கும் நெருப்புடா பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன. இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திடவும், அந்த விழாவில் ரஜினி எனும் மகத்தான மனிதர் பற்றி என் மனதில் உள்ளதை நிறைய பேச வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன்.இதற்கான அனுமதியை கேட்டபோது, விழாவால் ஒரு பக்கம் சந்தோஷம் ஏற்பட்டாலும் பலருக்கு சிரமம் ஏற்படும்; ஆகவே விழா வேண்டாம் என, சொல்லிவிட்டார். இந்த சூழலில்தான் அமெரிக்காவில் இருக்கும் அவரைப்பற்றி தவறான தகவல் வந்தது. உடனேயே பாடல்களை முன்னோட்டமாக (டீசராக) வெளியிட்டேன். உலகம் முழுவதும் பரபரப்பும், அவரைப்பற்றிய பெருமையான பேச்சும் ஏற்பட்டது. உடனே என்னை போனில் அழைத்து, ரசிகர்களை மட்டுமல்ல. இக்கட்டான சூழ்நிலையில் இருந்த என்னையும் உற்சாகப்படுத்தி விட்டீர்கள் நன்றி என்றார்.
படம் எப்போது வெளி வருகிறது?
இந்த ஜூலை மாதம் படம் வெளியாகும். முதலில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலாய் போன்ற மொழிகளில் வெளியாகும். அதை தொடர்ந்து, மேலும் சில மொழிகளிலும் வெளியாகும்.