Ad Widget

கபாலி படத்தின் கதை இதுவா?

ரஜினியின் ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 22–ந் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று இதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்தவுடன் ரசிகர்களிடம் மட்டுமல்ல, இந்த படத்தை பற்றி கேள்விப்பட்ட அனைவரிடமும் எதிர் பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Rajini-Kabali

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் உள்பட 50 நாடுகளில் கபாலி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய், சீன மொழி உள்பட பல்வேறு மொழிகளில் ‘கபாலி’ வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் கபாலி திரையிடப்பட இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் ஏசியா விமானத்தில் ரஜினி படத்துடன் ‘கபாலி’ பட போஸ்டர், முத்தூட். பைனான்ஸ் நிறுவனத்தில் ‘ கபாலி’ ரஜினி உருவம் பொறித்த தங்க, வெள்ளி நாணயங்கள் வெளியீடு, ஏர்டெல் நிறுவனத்தில் ‘ரீசார்ஜ்’ சலுகை என்று எங்கும் ‘கபாலி’ மயமாகவே உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இதை இயக்கியது குறித்து கூறிய பா.ரஞ்சித், “இந்த படத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. எனக்கு பிடித்த படங்களில் ஒன்றாக ‘கபாலி’ இருக்கும் என்று ரஜினியே கூறி இருக்கிறார். ரஜினியின் மறக்க முடியாத படங்களின் வரிசையில் ‘கபாலி’யும் இடம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ ரிலீஸ் நெருங்கி வரும் இந்த நிலையில் அதன் கதை என்ன என்பது இப்போது வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மலேசியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை ரப்பர் தோட்டமும், தேயிலை தோட்டங்களும்தான். இங்கு பெரும்பாலும் தமிழர்களே கூலி தொழிலாளர்களாக வேலை பார்க்கிறார்கள். இந்த தொழிலாளர்களின் உரிமைக்காக போராடியவராக ‘கபாலி’ சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்.

மலேசிய மலைப்பகுதியில் அமைந்துள்ள ரப்பர், தேயிலை தோட்டங்களில் வேலைபார்க்கும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் வழங்கப்படவில்லை. அவற்றை வென்றெடுக்க, தங்கள் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச்சொல்லி போராட ‘கபாலி’ என்ற இளைஞனை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த நிலையில் தாதா கூட்டம் ஒன்று அப்பாவி மக்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது. இதனால் ஆவேசமடையும் ‘கபாலி’ பொங்கி எழுகிறார். எதிரிகளை துவம்சம் செய்கிறார்.

கபாலி மீது தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் குமுதவல்லி காதல் கொள்கிறாள். நெருப்பாக சீறும் கபாலி காதலில் விழுந்து குமுதவல்லியிடம் பாசம் காட்டுகிறார். கபாலியின் குடும்ப வாழ்க்கையையும் ஒரு தாதா கூட்டம் குறிவைத்து குலைக்க நினைக்கிறது. குடும்பத்துக்கும், கொள்கைக்கும் பாதுகாவலராக இருக்கும் கபாலி எடுத்த முடிவால் சிறை செல்கிறார்.

25 ஆண்டுகள் மலேசிய சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு வரும் ‘கபாலி’ சர்வதேச தாதா ஆகிறார். அவர் எதிரிகளை பந்தாடியது எப்படி? ‘கபாலி’யின் ருத்ர தாண்டவத்தில் எதிரிகள் என்ன பாடுபட்டார்கள்? என்பது ‘ரஜினி’ ஸ்டைலுடன் பிரமாண்டமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி மனைவியாக ராதிகா ஆப்தே வருகிறார். மலேசியாவில் உரிமை இழந்த தமது மக்களுக்காக ரஜினி ஒரு பள்ளிக்கூடத்தை நடத்துகிறார். அங்கு கலையரசன் ஆசிரியராக வேலை பார்க்கிறார். தாதா கபாலியிடம் அட்டக்கத்தி தினேஷ் அடி ஆளாக வேலை பார்க்கிறார். கபாலியை உடன் இருந்து கவனிக்கும் வேடத்தில் ஜான் விஜய் நடித்து இருக்கிறார். வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி இதில் வயதான தாதாவாகவும், இளம் நாயகனாகவும் வந்து நடித்துள்ளார். மலேசிய நடிகர்களும், வில்லன்களும், பொதுமக்களும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பின்போது ரஜினிக்கு மலேசியாவில் ராஜமரியாதை கொடுக்கப்பட்டது. அங்குள்ள மக்களும் நாள் கணக்கில் காத்து நின்று ரஜினியை பார்த்து மகிழ்ந்தார்கள். இப்போது உலகம் முழுவதும் ரஜினியின் ‘கபாலி’ படத்தை காணும் ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.

Related Posts