கன மழை தந்த தமிழக கடல் பகுதி : காரணம் எல் நினோவா!

சென்னையில் பெய்த கன மழைக்கும் எல் நினோவுக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், நேரடியாக எல் நினோ தாக்கம் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை எல் நினோவின் பாதிப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக நாஸா தெரிவித்துள்ளது.

பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niño-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம்.

0912015-malai-nano-el - 1

எல் நினோவுக்கு எதிர்மறையாக இதே கடல்- வான் பகுதியில் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா. அதாவது கடலின் சராசரி வெப்ப நிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண்.

இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும், இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை. சராசரியாக 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோவும் லா நினாவும் நிகழ்கிறது. இந்த வெப்ப மாற்றம் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, சில நேரங்கள் சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். லா நினாவை விட எல் நினோ தான் அடிக்கடி உருவாகிறது.

சர்வதேச அளவில் நேரத்தை கணக்கிட உதவும், டேட் லைன் பகுதிக்கு 120 டிகிரி மேற்கில் பசிபிக் கடலின் இந்த மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் கடல் பகுதி உள்பட, உலகெங்கும் தரைப் பகுதிகளிலும் வானிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகின்றன.

0912015-malai-nano-el - 2

எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. லா நினா காலத்தில் உலகின் வட மேற்கு பகுதிகளில் குளிர்காலம் தாங்க முடியாத அளவுக்கு குளிருடன் இருக்கும். அதே நேரத்தில் தென் கிழக்கு பகுதிகளில் குளிர் வழக்கத்தைவிட குறையும்.

இந்த எல் நினோ விவகாரம் 400 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தென் அமெரிக்க மீனவர்கள் கடல் பகுதியின் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருப்பதை அப்போதே கண்டுபிடித்தனர். இப்போது உலகின் பல நாடுகளையும் சேர்ந்த அதி நவீன செயற்கைக் கோள்கள் இந்த மாற்றத்தை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வருகின்றன. இவை தரும் தகவல்களை ஒருங்கிணைப்பது நாஸா. இந்தப் பணியில் உள்ள நாடுகள்- செயற்கைக் கோள்கள் படம் கீழே..

0912015-malai-nano-el - 3

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தனது Global Precipitation Measurement (GPM) mission திட்டத்தின் கீழ் வரும் இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள் உள்பட உலகின் டாப் 12 வானிலை ஆய்வு செயற்கைக் கோள்கள் தந்த டேட்டாவை வைத்து கடந்த நவம்பர் 17ம் தேதி ஒரு விவரத்தை வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலகெங்கும் நிலவிய கடல் பகுதி வெப்பத்தின் அளவு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் கீழே..

0912015-malai-nano-el - 4

இதில் தமிழகத்தை சுற்றியுள்ள வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட மிக மிக அதிகமாக, அதாவது ரெக்கார்ட் அளவில் இருப்பது தெரியவந்தது. இது போன்ற பல விவரங்களை நாஸாவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருக்கும். இதனால் தான் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என எச்சரித்தோம் என இஸ்ரோ கூட கூறுகிறது.

இந் நிலையில் கடந்த டிசம்பர் 1 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த மழையின் உக்கிரத்தை காட்டும் இன்னொரு அனிமேஷனையும் நாஸா வெளியிட்டுள்ளது. அது கீழே..

0912015-malai-nano-el - 5

இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இன்ச் அளவுக்கு இங்கே மழை கொட்டித் தீர்த்திருப்பதை நாஸாவின் பல செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன. இது குறித்து நாஸாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் கூறுகையில், தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும். இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை.

ஆனால், இந்த ஆண்டு எல் நினோ காரணமாகவும் தமிழகத்தை சுற்றிய கடல் பகுதி வெப்பம் மிக மிக அதிகமாக இருந்ததாலும் பருவ மழையின் அளவும் பெரும் அளவு அதிகரித்துவிட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த மாதிரியான தகவல்கள் எல்லாம் கிடைத்தவுடன் மேற்கு நாடுகளில் முன்னெச்சரிக்கை என்று சொல்வார்களே, அந்த ஒரு நடவடிக்கையில் ஒட்டு மொத்த அரசு எந்திரமும் குதிக்கும், முடிந்தவரை சேதத்தை தவிர்க்கும்.

Related Posts