கன்னியா வெந்நீர் ஊற்று சர்ச்சை; பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் விகாரை அமைக்க நீதிமன்றம் தடை

திருகோணமலை – கன்னியா, வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் விவகாரம் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியா, வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கோகில ரமணி எனும் பெண் எழுத்தானை விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர், கொழும்பு தொல்பொருள் திணைக்களம் பணிப்பாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் தரப்பில், சட்டதரணிகளான உதயகுமார், பிராஷாந்தினி மற்றும் ஜனாதிபதி சட்டதரணியான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, வெந்நீரூற்று பகுதிக்கு அருகாமையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேவேளை, மனுதாரரையோ அல்லது மற்றைய பக்தர்களையோ கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயிலுக்கு அல்லது அதனை அண்மித்த பகுதிக்கோ செல்ல தடுக்கக் கூடாது எனவும், அப்பகுதியில் பற்றுச் சீட்டுக்கள் அதாவது அனுமதிச் சீட்டுக்கள் விற்பதை தடை செய்யுமாறும் எதிர்மனுதாரர்கள் மாரியம்மன் கோயிலுக்கு உரித்தான ஆதனங்களை நிர்வகிப்பதை தடுக்கக் கூடாது எனவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று இடைக்கால தடை உத்தரவினை விதித்துள்ளார்.

அத்துடன் எதிர்மனுதாரர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.

முன்னதாக சுமந்திரன் ஆதீனம் சைவ மகாசபை  இந்துத்தலைவர்களை  தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

Related Posts