கொழும்பு சுகததாச அரங்கில் நேற்று திங்கட்கிழமை (07) நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மேலும் 3 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது. ஆனால், அன்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் முதலாம் நாள் போட்டிகள் இடைநடுவில் பிற்போடப்பட்டது.
நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டிகளில் ஆண்களுக்கான போட்டிகளில் 2 புதிய சாதனைகளும் பெண்களுக்கான போட்டிகளில் ஒரு புதிய சாதனையும் நிலைநாட்டப்பட்டன
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.14 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் றோயல் கல்லூரி வீரர் நதுன் பண்டார புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 16.98 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த பாணந்துறை றோயல் கல்லூரி வீரர் ரஹிந்து அல்விஸ் புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.
19 வருடங்களுக்கு முன்னர் பிங்கிரிய, சரணங்கார வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர். பிரேரான நிலைநாட்டியிருந்த 16.48 மீற்றர் என்ற சாதனையையே ரஹிந்த அல்விஸ் நேற்று புதுப்பித்தார்.
16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஈட்டியை 37.42 மீற்றர் தூரம் எறிந்ததன் மூலம் மொறட்டுவை, பிறின்செஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரி வீராங்கனை கேஷவி உதேஷானி புதிய சாதனையை நிலைநாட்டினார்.
கடந்த மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி புதிய போட்டி சாதனை (3.15 மீற்றர்) நிலைநாட்டியிருந்தார்.
திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான 18 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் சந்திரகுமார் துசாந்தன் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் 3.8 மீற்றர் உயரத்தைத் தாவினார்.
அதனை விட கூடுதல் உயரத்தைத் தாவ முயற்சித்தபோது கோலூன்றிப் பாய்தலுக்கான மெத்தை விளிம்பில் அவர் வீழ்ந்ததால் கடும் உபாதைக்குள்ளானார். இதனை அடுத்து அம்பியூலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது பயிற்றுநர் சுபாஷ்கரன் தெரிவித்தார்.
இதே வேளை 16 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப்ப்பாய்தலில் சி.சுவர்ணா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறும்.