கனமழை காரணமாக இந்தியாவில் பேரழிவு: இதுவரை 300 பேர் உயிரிழப்பு

கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக இதுவரையில் 300 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வீடுகள், விவசாய நிலங்கள், பாதைகள் என பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்தும் உள்ளன.

India-flood-

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இதனால் வெள்ளம் ஏற்பட்டு ஏனைய பகுதிகளுக்குள்ளும் அது ஊடுருவியுள்ளது.

குறிப்பாக கங்கை மற்றும் யமுனா போன்ற நதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. முக்கிய வழிபாட்டு மற்றும் சுற்றுலா இடங்களாகக் கருதப்படும் வாரனாசி, அல்லஹபாத் போன்ற பிரதேசங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அங்கு அதிகமான வீடுகள், கட்டடங்கள் மற்றும் பாதைகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். பாடசாலைகள் மற்றும் பாதைகள் என்பனவும் அங்கு மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் உள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக பல இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளும் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன.

தேசிய அனர்த்த முகாமைத்துவ படையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்பொழுது வெள்ளத்தினால் சுமார் 170 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts