வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது.
கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மேல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக மேற்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கனகராயன்குளம் பொலிசாரே கட்டப்பஞ்சாயத்தா! லஞ்சம் வாங்கவா வஞ்சம் தீர்த்தீர்கள், கொத்து ரொட்டிக்காகவா சிறுமி வயிற்றில் குத்தினீர்கள், பொலிசின் சிறப்பு பயிற்சியை சிறுவர் மீது காட்டாதே, ஏழைகளின் சொத்துக்களை ஏப்பம் விடாதே, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை உடனடியாக மாற்று போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குளம், ஓமந்தை மற்றும் கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டதுடன் வவுனியாவிலிருந்து பேரூந்து மூலம் விசேட பொலிஸ் அணியினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இவ் போராட்டத்தின் முடிவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், வன்னி பாராளுமன்றற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
குறித்த குடும்பத்தினன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் முடிவில் அவருக்கான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இப் போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் மற்றும் பொதுமக்கள், கனகராயன்குளம் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பொலிஸாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கனகராயன்குளம் வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.