சென்னையில் நடிகர் விஜயின் ‘கத்தி’ திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது மர்மநபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் கத்தி. இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினருடையது எனக் கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை வெளியிட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தீபாவளியன்று கத்தி படம் நிச்சயமாக ரிலீஸ் செய்யப்படும் என லைகா நிறுவனம் அறிவித்தது.
அதன்படி, நாளை அப்படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கத்தி படம் வெளியாக இருந்த இரு திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் கத்தி படத்திற்காக டிக்கெட் முன்பதிவு நேற்றிரவு 11.30 மணியளவில் தொடங்கியது. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் தியேட்டர் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, திரைப்படத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தியேட்டர் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடினர்.
இதில் தியேட்டர் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தியேட்டர் ஊழியர்கள் போராடித் தீயை அணைத்தனர். தாக்குதல் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல், கத்தி படம் வெளியாக உள்ள சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரிலும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதல் சம்பவங்களால் கத்தி படம் வெளியாவதில் மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.