கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களுக்கு தொடரும் எதிர்ப்பு

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கத்தி படத்திற்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை மையப்படுத்தி உருவாகியுள்ள புலிப்பார்வை படத்திற்கும் தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

kathi

துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசும் மீண்டும் இணைந்து கத்தி என்ற படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திரைப்படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துவருகிறது.

இந்த நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் என தமிழகத்தில் உள்ள பல அமைப்புகள் கருதுகின்றன. இதனால், இந்தப் படத்திற்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன.

இதையடுத்து, இந்தப் படத்தின் இயக்குனர், முருகதாஸ், நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையப்படுத்தி புலிப்பார்வை என்ற படத்தை பிரவீண் காந்தி என்ற இயக்குனர் உருவாக்கிவருகிறார். இந்தப் படத்தில் பாலச்சந்திரனை சிறுவர் போராளியாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி இதற்கும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தற்போது மாணவர் அமைப்புகளும் இந்தத் திரைப்படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழக இளைஞர் மற்றும் மாணவர் இயக்கம், மாற்றம் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு ஆகிய அமைப்புகள் இந்தத் திரைப்படம் வெளியாகக்கூடாது என்று கூறியுள்ளன.

இது குறித்து மாற்றம் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பச் சேர்ந்த பிரதீப்பிடம் கேட்டபோது, “தமிழகத்தில் பணத்தைச் சம்பாதித்து சிங்கள நாட்டிற்கு கொண்டுசெல்ல விரும்புகிறார்கள். அதேபோல, புலிப்பார்வை படத்தில் பாலச்சந்திரனை சிறுவர் போராளியாக காட்டுகிறார்கள். அதன் மூலம் அவர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்க முயல்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

கத்தி திரைப்படத்தைப் பொறுத்தவரை, அந்தப் படக் குழுவினர் பல்வேறு அமைப்புகளையும் சந்தித்து இது குறித்து விளக்க முயற்சித்துவருகின்றனர். புலிப்பார்வை படத்தின் இயக்குனரான பிரவீண் காந்தியிடம் கேட்டபோது, இந்தத் திரைப்படம் பாலச்சந்திரனை பெருமைப்படுத்தும் படம் என்று குறிப்பிட்டார்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய பிரவீண் காந்தி, “பாலச்சந்திரனை நிஜத்தில் சிறுவர் போராளியாகக் காட்டவேயில்லை. பாலச்சந்திரன் கொல்லப்பட்ட பிறகு, எப்படி வீரனாக வந்திருக்க வேண்டியவன் என பிறர் நினைத்துப் பார்ப்பது போன்ற ஒரு பாடல் காட்சி இடம்பெற்றிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அதை நீக்கிவிட்டோம்” என்று குறிப்பிட்டார்.

விரைவில் புலிப்பார்வை படத்தின் பாடல்கள் வெளியாகவிருக்கும் நிலையில், அந்த விழாவில் இந்தப் படம் குறித்து விளக்கப்போவதாக புலிப்பார்வை படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய எதிர்ப்பை மீறி இந்தப் படங்கள் வெளியானால் தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

Related Posts