கத்தி, புலிப்பார்வைக்கு தடை கோரி மனு

தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய இரு தமிழ் திரைப்படங்களையும் வெளியிடக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுவான்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

kaththi_vijay

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ரமேஷ் இம்மானுவேல் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘எதிர்வரும் தீபாவளி தினத்தில் கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய இரு திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த திரைப்படங்கள் தமிழ்க் கலாசாரம், இலங்கைப் போர் தொடர்பான தமிழர் உணர்வுகளை மோசமாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது.

கத்தி திரைப்படத்தை தயாரித்துள்ள ஐங்கரன் இன்டர்நெஷனல் நிறுவனத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மறைமுகமாக நிதியுதவி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் தமிழர் உணர்வுகளை புண்படுத்துவதாக வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்ட தமிழ்ப் பெண்கள் அமைதியாக வாழ்வதாகவும் சிங்களவர்கள், தமிழர் இனக் கலப்பு மூலம் அங்கு புதிய இனம் தோன்றுவதாகவும் கத்தி படத்தில் கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

புலிப்பார்வை திரைப்படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. இப்படம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணத்தை மோசமாக சித்தரித்துக் காட்டுவதாக உள்ளது. பாலச்சந்திரனை சீன இராணுவத்தினர் கொன்றதாக புலிப்பார்வை படத்தில் கூறியுள்ளனர்.

மேற்கண்ட 2 படங்களும் தமிழர்களை தீவிரவாதிகளாகவும் தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கின்றன. போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை திசை திருப்புவதற்காக இப்படிப்பட்ட திரைப்படங்களை இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியிடப்பட்டால், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இந்த 2 திரைப்படங்களையும் திரையிட தடை விதிக்கும்படி டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், இருதரப்பு வாதங்களை கேட்டறிந்தார். தீர்ப்பை வேறொரு நாளுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Posts