கதிர்காமம் உற்சவ கொடியேற்றம் இன்று

மூவின மக்களும் பக்தியுடன் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

kathirkamam

கதிர்காமம் உற்சவத்தினை ஒட்டியதாக யால காட்டினூடாக சராசரி 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் வரை பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

ஆலய திருக் கொடியேற்றல் நிகழ்வு இன்று காலை கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் பள்ளிவாசலை வலம் வந்து உள்ளே பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத பெரியார்களுடன் கதிர்காம ஆலய கப்புறாளையுடன் கொடியேற்றப்படும்.

ஒவ்வொரு நாள் இரவும் யானைகள் மற்றும் புராதன கலை கலாசார சம்பிரதாயங்களுடன் பெரஹரா வீதி உலாவரவுள்ளதோடு ஜூலை 19 ஆம் திகதி இரவு ரன்தோலி மஹா பெரஹராவும் இடம் பெறவுள்ளது. ஜூலை 20 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல் உற்சவம் நிறைவு பெறவுள்ளது. உற்சவத்தை முன்னிட்டு நாடு பூராவிலிருந்தும் ரயில், பஸ்களை விசேடசேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களமும் போக்குவரத்து சபையும் நடவடிக்கை எடுத்துள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர். இத்தோடு புனிதப் பிரதேசத்தில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்று தயாரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இதனூடாக பாதைகள் மற்றும் மாணிக்க கங்கையில் பக்தர்களுக்கு பாதுகாப்பாக நீராடுவதற்கான பிரதேசங்கள் என்பனவும் பெயரிட்டு காட்டப்பட்டுள்ளதோடு உயிர் பாதுகாப்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ காரியாலயமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் ஜூம்ஆப் பள்ளியின் கொடியேற்றம் இன்று மாலை ஐந்து மணிக்கு கதிர்காமம் ருஹணு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி. குமாரகேயினால் மேற்கொள்ளப்படவுள்ளது. சட்ட விரோத செயல்கள், வியாபாரம் மற்றும் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸார் விசேட திட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்தவுள்ளதாகவும் கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே மேலும் தெரிவித்தார்.

Related Posts