கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார்.
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இந்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. இந்தக் கைத்தொழில்பேட்டை புனரமைப்பு செய்யப்பட்டதால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இங்கு முதலீடுகளைச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இக்கைத்தொழில்பேட்டை உதவும். இந்த கைத்தொழிற்பேட்டையால் உள்ளூர் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
இந்தக் கைத்தொழிற்பேட்டை முழுமையாக பூர்த்தி அடைந்ததும், 2 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புக்களும் மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.
வடமாகாணத்திற்கான புகையிரத சேவைக்கான புனரமைப்பு வேலைகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அப்பணிகள் முடிவடைந்து அடுத்த மாதமளவில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனூடாகவும் இக்கைத்தொழில் பேட்டை விருத்தி அடையும்.
இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் மிகப்பாரிய செயற்றிட்டங்களை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது.
துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்புக்கான அடிக்கல் புதன்கிழமை (27) நாட்டப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் 145 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்தப்புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.
யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த முறையிலே மிகப்பெரிய கலாச்சார மண்டபம் ஒன்று இந்திய உதவித்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கு 1.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அதன் பணிகள் பூர்த்தி அடையும்.
நாங்கள் ஒரு காலத்தை எதிர்பார்க்கின்றோம். அதாவது, கதிர்காமத்தில் ஒரு புகையிரத டிக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு இந்த நாட்டுக்குள் உள்ள அனைத்து இடங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் சில முக்கிய நகரங்களுக்கு பயணிப்பதற்கான காலம் உதயம் ஆகும் என்பதாகும்.
இந்தியாவின் புதிய அரசாங்கமான பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கமும் தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது என்பதையும் மகிழ்வுடன் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.