வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இடைக்காடு அக்கரை கிராம சேவையாளர் பிரிவில் (ஜே/283) கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முடிந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள போதும் அந்தப்பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்நாட்டுப் போரினால் இடைக்காடு அக்கரைப் பிரதேச மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர். 23 வருடங்கள் கடந்த நிலையில் மேற்படி பிரதேசத்தில் மீளக் குடியமர்வதற்காக 120 குடும்பங்கள் வரை கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
கண்ணி வெடி அகற்றப்படாமையை காரணம் காட்டி மேற்படி பிரதேசத்தின் மீள் குடியமர்வு நடவடிக்கைகள் பிற்போடப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அக்கரை கிராம சேவையாளர் பிரிவில் கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கண்ணி வெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த நிலையிலும் அந்தப் பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்குரிய எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவில்லை.