கணிதம் சித்தியடையாவிட்டாலும் கற்கையை தொடரும் முறை

க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப்பாடம் சித்தியடையாமல் உயர்தரத்தில் கலைப்பிரிவில் மட்டும் கல்வி கற்கும்முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கல்வியமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பந்துல குணவர்தன எம்.பி தனது உரையில்,

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாது விட்டாலும் மாணவர்களின் ஏனைய திறமைகளைக் கருத்தில் கொண்டு உயர்தரத்தில் கல்வி கற்க எமது அரசில் எமது அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்நடைமுறையை தற்போதைய கல்வியமைச்சர் நிறுத்திவிட்டார். இது மாணவர்களுக்கு செய்யப்பட்ட பெரும் அநீதி என்றார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அத்திட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதனை ஏற்க மறுத்த பந்துல குணவர்தன எம்.பி. இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக நீங்கள் கூறியதாக குறிப்பிட்டு அரச பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

அப்படி இருக்கும் போது எப்படி நீங்கள் நிறுத்தவில்லை என கூற முடியுமெனக் கேட்டார். இதற்கு கல்வி அமைச்சர் பதிலளிக்கையில்,

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாதவர்கள் உயர்தரத்தில் கலைப்பிரிவில் மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள்.

கணித பாடத்தில் சித்தியடையாதவர்கள் உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏனெனில் உயர்தர கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்க கணிதபாட சித்தி அவசியம் என்றார்.

Related Posts