கணவர் இன்றி துன்பத்துடன் வாழ்கின்றோம் – அரசியல் கைதியின் மனைவி வேதனை

நல்லாட்சி அரசாங்கம் தனது கணவரையும் ஏனைய அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வின் ஊடாகவோ அல்லது பொது மன்னிப்பின் அடிப்படையிலேயோ, விடுதலை செய்ய வேண்டுமென, மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி ஒருவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த 2009ம் ஊனமுற்ற அவரது கணவரை இராமநாதன் முகாமில் இருந்த போது, இராணுவத்தினர் பிடித்துச் சென்றதோடு, பின்னர் 12 நாட்களின் பின்னர் வீட்டில் கொண்டு வந்து விட்டு, யாருக்கும் சொல்ல கூடாது என கூறியுள்ளனர்.

இவ்வாறு மூன்று தடவைகளுக்கு மேல் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இவருக்கு பின்னர் கொழும்பிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவருடன் நானும் எனது கடைசி மகளும் சென்றோம். அப்போது, கணவரை விட முடியாது. நீங்கள் வீடு செல்லுங்கள் என கூறிவிட்டார்கள் என குறித்த பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கணவர் இன்றி நானும் எனது பிள்ளைகளும் மிகவும் துன்பத்துடன் வாழ்கின்றோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கலந்து கொண்ட மற்றுமொருவர், தனது மகன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் அரசியல் கைதியாக சிறைச்சாலையில் இருப்பதாலும், தான் பாரிசவாத நோயாளியாகிவிட்டதாக குறிப்பிட்டார்.

எனவே, அனைவரையும் நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts