பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. ´சுப்ரமணியபுரம்´ படத்தில் எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆனார்.
´உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்´ படத்தில் எழுதிய மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா, ´தெனாலி´ படத்தில் எழுதிய இன்சிரங்கோ இன்சிரங்கோ´, ´வாரணம் ஆயிரம்´ படத்தில் வரும் உன்ன உன்ன தேடி வந்தேன் அஞ்சல பாடல்கள் ஹிட்டாகின. ´வேட்டையாடு விளையாடு´, ´காக்க காக்க´, ´கஜினி´ உள்பட ஏராளமான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
தாமரைக்கும் எழுத்தாளர் தியாகுக்கும் கடந்த 2001–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தாமரையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தியாகு பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை கவிஞர் தாமரை தனது மகன் சமரனுடன் சூளைமேடு பெரியார் பாதை முல்லை தெருவில் கணவர் தியாகு வசிக்கும் வீட்டுக்கு வந்தார். அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டு வாசலில் மகனுடன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
அப்போது தாமரை நிருபர்களிடம் கூறியதாவது:–
எனக்கும் தியாகுக்கும் 14 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். தமிழ் உணர்வு போராட்டங்களுக்கு அவருக்கு பக்கபலமாக இருந்தேன். கடந்த வருடம் திடீரென ஒரு திருடன் மாதிரி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அதன்பிறகு வீட்டுக்கு வரவே இல்லை. என்னை பிரிந்ததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
இப்போது கோர்ட்டு மூலம் விவகாரத்து பெற முயற்சிப்பதாக கேள்விப்பட்டேன். தியாகு மீண்டும் வீட்டுக்கு வந்து என்னோட வாழ வேண்டும். முடிவு தெரியாமல் இங்கு இருந்து கிளம்பமாட்டேன். தமிழ் அமைப்பினர் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு தாமரை கூறினார்.