தாயின் தங்கநகைகளைத் திருடிய மற்றும் தங்கநகைகளை திருடுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 1,500 ரூபா அபராதத்துடன், 4 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
யாழ். மேல் நீதிமன்ற வழக்கு ஒன்றில் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படும் கணவனை பிணையில் எடுப்பதற்காக தனது தாயின் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்ணும் நகைகளைத் திருடுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மற்றைய நபரும் யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.
பிறிதொரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இப்பெண்ணின் கணவர் மீதான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கணவரை பிணையில் விடுதலை செய்வதாக நீதமன்றம் தெரிவித்திருந்தபோதிலும், அவரைப் பிணையில் எடுப்பதற்கான பண வசதி அப்பெண்ணிடம் இருக்கவில்லை. இந்த நிலையில் தனது தாயிடம் இருந்த ஒருதொகை தங்கநகைகளை அப்பெண் திருடியுள்ளார்.
தனது நகைகள் திருட்டுப் போன சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் தாய் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணுடன் இளைஞர் ஒருவரையும் கைதுசெய்து விசாரணை செய்தபோது இவர்கள் நகைகளை திருடியமை தெரியவந்தது.