கணக்கறிக்கைகளுடன் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவேண்டும் – சர்வேஸ்வரன்

2013 – 2014 வரி மதிப்பீட்டு ஆண்டுக்குரிய விபரத்திரட்டு சமர்ப்பிக்கும் போது கணக்கறிக்கையுடன் அதனுடன் தொடர்புபட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’என்று யாழ். வருமானவரி பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி எஸ்.சர்வேஸ்வரன், திங்கட்கிழமை(20) தெரிவித்தார்.

அனைத்தையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘யாழ். மாவட்டத்திலுள்ளவர்கள், வரிமதிப்பீட்டு ஆண்டுக்குரிய விபரத்திரட்டு சமர்ப்பிக்கும் போது கணக்கறிக்கையை மாத்திரமே சமர்பிக்கிறார்கள்.

அதற்குகாரணம் அவர்கள் சரியான ஆவணங்களை பின்பற்றி கணக்குகள் செய்யாமல், ஒற்றை பதிவின் அடிப்படையில் கணக்குகளை பதிந்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் தாங்கள் இலாபம் உழைக்கின்றோமோ இல்லையோ என்று தெரியாமல் எடுகோளின் அடிப்படையில் கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர். இதனால் சரியான வரி மதிப்பீட்டை மேற்கொள்ளமுடியாது.

ஆகவே,கணக்கறிக்கைகளுக்குரிய ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிப்பதன் மூலம் சிறந்தமற்றும் சரியான வரி மதிப்பீட்டை மேற்கொள்ளமுடியும்.

அத்துடன்,ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக அவர்களுக்கு மேலதிகமாக ஒருமாதகால அவகாசம் வழங்குவதற்கும் தயாராகவிருக்கின்றோம்’என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts