கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

“யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் கட்டளைப்படி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோத்தர்களினால் நேற்று (ஏப்ரல் 12) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலி மற்றும் மானிப்பாய் ஆகிய இடங்களில் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு 4 வர்த்தக நிலையங்களில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது. அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் வர்த்தக நிலையங்களில் நியாயமான விலைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாவனையாளர்களுக்குக் கிடைப்பதற்கான வழிவகைகளும் மேற்கொள்ளப்பட்டன” என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts