கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி

நடிகை டாப்சி இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

“நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன்மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. அப்போதும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடித்தேன். ஒருகட்டத்தில் சினிமா பிடித்தது. அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டேன்.

எனக்கு தன்னம்பிகை அதிகம். எதற்கும் பயப்படமாட்டேன். மாடலிங் செய்தபோது எனது தந்தை தூக்கம் இன்றி தவித்தார். மற்றவர்கள் தவறாக பேசுவார்களோ என்று பயந்தார். எனது படங்கள் விளம்பரங்களில் வெளியாகி நண்பர்கள் அவரை பாராட்டிய பிறகுதான் நிம்மதியானார்.

சுற்றி இருப்பவர்களுக்கு பயந்துதான் பெற்றோர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தே வந்து இருக்கிறேன். பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது வரை வெளியுலகம் பற்றி எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வந்த பிறகு நண்பர்கள் மற்றும் வெளியாட்களுடன் பழகிய பிறகுதான் உலகத்தை பார்த்தேன். இப்போது எனது பெற்றோர் நான் சொல்வதை கேட்கிறார்கள். பெண்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்பதையும் நம்புகிறார்கள்.

கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது. மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பதை விட்டுவிட வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையில் சந்தோஷம் வரும். நம்மை பற்றி சிந்திக்காமல் மற்றவர்கள் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும் எனது படங்கள் வசூல் குவிக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை. மனதுக்கு மகிழ்ச்சி தருவதால் நடிக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகி விடுவேன். தமிழ், தெலுங்கு பட உலகில் வாய்ப்புகள் குறைந்து விட்டன. நல்ல கதைகள் வரும்போது அந்த மொழிகளில் நடிப்பேன். எனது திருமணத்துக்கு அவசரப் படவில்லை. இந்த விஞ்ஞான யுகத்தில் 60 வயதில் கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். பிடித்தமானவரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்வேன்.”

இவ்வாறு டாப்சி கூறினார்.

Related Posts