கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய விமானப்படை, இராணுவம், சிவில் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிகளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெளிவரும், உட்செல்லும் பயணிகள் அதிகளவில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். பிரஸல்ஸ் விமான நிலையத்தில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 34 பேர் பலியாகியதுடன் பலர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், முன்னெச்சரிக்கையாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, விமான நிலைய தொலைபேசி அழைப்புக்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Related Posts