யாழில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணியானது கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையினால் யாழில் நடத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரை நிகழ்வை நல்லூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது மிக நெருக்கடியான நிலைமைகளைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது. இவ்வாறான சூழலில் ஜனாதிபதித் தேர்தலும் வரவிருக்கிறது.
ஆகவே இதற்கு முன்பாக தமிழ் மக்கள் தங்கள் மனோநிலையை ஒருமித்துக் காட்டுவதற்கும் தங்கள் கருத்துக்களை வெளியில் சொல்வதற்கும் மாத்திரமல்லாது வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு வாக்களிப்பது என்ற சூழலை உருவாக்குதவற்குமாக எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளது.
எகவே இலங்கையில் இருக்கக் கூடிய சகல தமிழ் மக்களும் யாழில் அணி திரளவேண்டும்” என அவர் தெரிவித்தார்.