கடும் மழை: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

chennai-air-port-rains-2

சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார்.

சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன.

புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல இடங்களில் மின்சார தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்தும் பொதுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குப் புறப்படும் 12 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சென்னையைத் தென்மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி.எஸ்.டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் பல மணிநேரங்களாக நீடிக்கிறது.

மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகளில் துவங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல்வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai-air-port-rains-1

Related Posts