கடுமையான வரட்சியை எதிர்நோக்கும் அபாயத்தில் இலங்கை!

கடுமையான வரட்சியை நாடு எதிர்க்கொள்ளவுள்ள நிலையில், நீரையும், மின்சாரத்தையும் இயன்றளவு சிக்கனமாக உபயோகிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர்,

‘எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் இலங்கையில் மிகவும் குறைந்தளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும் என வானிலை ஆய்வு மையத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் கடுமையான வரட்சியை எதிர்க்கொள்ளக் கூடிய அபாயத்திற்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்.

2016ஆம் ஆண்டில் நாம் எதிர்ப்பார்த்த மழைவீழ்ச்சி ஏற்படாமையே எதிர்காலத்தில் வரட்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளமைக்கு காரணமாக அமைந்துள்ளது.

எனவே இந்த தருணத்தில் இரு கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைக்கின்றேன். அதாவது, நீரை முடிந்தளவு சிக்கனமாக உபயோகப்படுத்துங்கள். வாகனங்களை கழுவுதல் போன்ற காரணங்களுக்காக நீரை விரயமாக்காதீர்கள். இரண்டாவதாக மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் ஓர் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் அதன்போது, தேவையான மாவட்டங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் ஏற்படக்கூடிய வரட்சி காலநிலையை சமாளிப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தற்போது இருந்தே மேற்கொண்டு வருகின்றோம். அதேவேளை, வரட்சியால் பாதிக்கப்படும் மக்களின் அனைத்து விதமான தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தற்போதிருந்து முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றது என்பதையும் நான் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்றார்.

Related Posts