கடுகு படத்தை வாங்கியது ஏன்? சூர்யா

சிறிய பட்ஜெட்டில் கோலி சோடாவை கொடுத்து வெற்றி பெற்ற விஜய் மில்டன், பெரிய பட்ஜெட்டில் பத்து எண்றதுக்குள்ள படத்தை கொடுத்து தோல்வி அடைந்தார். ஒரு வெற்றி, ஒரு தோல்விக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி உள்ள படம் கடுகு. இதில் பரத், ராஜகுமாரன், சுபிக்ஷா, ராதிகா பிரதிஷ்டா உள்பட பலர் நடித்துள்ளார்கள். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார். இதனை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா வாங்கி வெளியிடுகிறார்.

இதன் பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியதாவது:

இங்கு இருக்கிற அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் சினிமாவில் வாழ்க்கை கிடைச்சிருக்கு. சினிமாவுக்கு நாங்க திருப்பி என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போலத்தான் 2டி என்டர்டெயின்மெண்ட்டை நான் பார்க்கிறேன். நல்ல படங்களையும் ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்கணும். ட்ரீம் வாரியர், பொட்டென்சியல், ஸ்டுடியோ க்ரீன் என்று இருந்தாலும் நான் நேரடியாக பண்ணனும் என்று தோன்றியது. அதனால தான் 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன். முதலில் படம் தயாரிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். பசங்க 2, 36 வயதினிலே என்று படம் தயாரித்தோம்.

எப்பவுமே சின்ன பட்ஜெட் படத்தில் மனம் சார்ந்த விஷயம் நடக்கும். என்ன தடங்கல் வந்தாலும், என்ன பிரச்னை வந்தாலும் நடத்தி காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில் தான் வரும். எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. மறுபடியும் ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா, ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகனும் என்று எனக்கு ஆசை வந்தது. அதனால் அதுபோன்ற எண்ணத்தோடு, வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்களோடு இணைந்தேன்.

கடுகு படம் பார்த்தோம் நல்ல படம், ரிலீஸ் பண்ண முடிவு செய்தோம். இது ஒரு புது முயற்சி, இதற்கு நான் ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கிறேன். சில படங்கள் மனசார பண்ணனும் என்று தோன்றும். அந்த வரிசையில் கடுகு ஒரு படமாக தெரிந்தது. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் படம் பிடிக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்திற்குள் போய்விடுவோம். யுனிக் படத்தை யார் எடுத்தாலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள். சிறியது பெரியது என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பார்கள். இவ்வாறு சூர்யா பேசினார்.

விழாவில் சூர்யா பாடல்கள் வெளியிட, கருணைவேல் – சொர்ண லட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் .

Related Posts