அகதிகளின் வருகையைத் தடுக்கும் முகமாக அவுஸ்திரேலியாவுக்குள் கடல்வழி மூலமாக நுழையும் மக்களுக்கு, அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இந்த அறிவிப்பினை அவுஸ்திரேலியப் பிரதமர் மார்க்கம் டர்ன்புல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இச்சட்டத்தின்படி கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகள் அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் சுற்றுலா விசா மூலமாகக்கூட அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது. இதில் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.
இத்தடையானது, 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதியிலிருந்து கடல்வழி மூலம் பயணித்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் அன்றைய திகதியிலேயே முன்னாள் பிரதமர் கெவின் ரூட் விசாவின்றி படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
அவுஸ்திரேலிய அரசு தனது கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி நவுரு, மனுஸ் தீவு தடுப்பு முகாம்களிலுள்ள அகதிகளை தனது நாட்டுக்குள் குடியமர்த்துவதற்கான கடுமையான எதிர்ப்பாக இது இருக்கும் என்பதுடன், ஆட்கடத்தல் காரரர்களுக்கான எச்சரிக்கையாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் தனது ஆதரவை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொழிற்கட்சி இதுவரை எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என்பதுடன், இச்சட்டத்திற்கு சர்வதே மன்னிப்புச் சபை தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.