வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், ”இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றதுடன் இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் காங்கேசன்துறை, திருகோணமாலை, மட்டக்களப்பு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதியில் காற்றின்வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
தரையில் சுமார் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை இருக்கலாம். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.