கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கள் தவறானது : எமிலியாம்பிள்ளை

Board-race-velanaiவடமாகாண கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கள் கடற்றொழில் பற்றிய தாற்பரியமும், அறிவும், அனுபவமும், ஈடுபாடும் அற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் கூறிய ‘இந்திய மீனவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்க கூடாது’ என்ற கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வடமாகாண கடற்றொழில் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினரை சந்தித்த போது, இந்திய மீனவர்கள் கடல் எல்லை தெரியாமல் எமது கடற் பிரதேசத்திற்குள் வருகின்றனர். எமது கடல் வளங்களை அழிப்பதற்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடயம் உண்மைக்குப் புறம்பானது. அத்துடன், இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் முன்னர் கடற்றொழில் சமூக தலைவர்கள், அங்கத்தவர்களிடம் கலந்தாலோசித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தால், ஆரோக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.

வடமாகாண கரையோரங்களுக்கு அண்மையில், வன்னி நிலப்பரப்பிற்கு அண்மித்த கடற்பிரேதசமான பாலைதீவு, காரைநகர், மாதகல் மற்றும் வடமராட்சி கடற்பிரதேசங்களிலும் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அம்மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் தாங்கள் அறியாமல் இருப்பது கடற்றொழிலாளர்கள் மீதும், அவர்களது நல்வாழ்க்கை மீதும் தாங்கள் கொண்டுள்ள அக்கறையினை வெளிப்படுத்துகின்றது.

இந்திய மீனவர்கள் எமது கடற் பிரதேசத்தில் அத்துமீறி பிரவேசித்து இழுவைப்படகைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதன் மூலம் எமது மீனவர்களின் பல லட்சம் பெறுமதியான வலைகள் அழிக்கப்படுவதையும், அதேவேளை இந்திய மீனவர்கள் இழுவைப்படகு மூலம் எமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவார்களாயின் எமது கடல்வளம் முற்றாக அழிவடையவுள்ளதுடன், 30 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் விரைவில் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டி வருமென தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து ஆயிரக்கணக்கான எமது மீனவர்கள் யாழில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் இவ்வேளையில், வடமாகான மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சரின் இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக்கைகளினால், அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதகமான நிலை ஏற்படுவதற்கு சந்தர்ப்பமாக அமையும்.

எனவே, எதிர்காலத்தில் எமது மீனவ குடும்பங்களின் நலனில் அக்கறைகாட்டி, எமது மீனவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வலுவூட்டும் வகையில், இந்திய இழுவைப்படகின் அத்துமீறலை தடுப்பதற்கு இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறும் மீனவர் சமூத்தினர் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts