கடற்படை, இராணுவ அதிகாரிகள் மீது விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி பணிப்பாளருக்கு இடமாற்றம்!!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், தாஜூதீன்் படுகொலை உள்ளிட்ட பெரும் குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை, இராணுவ அதிகாரிகள் மீதான முக்கிய குற்றச்செயல் குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்திவந்த மூத்த பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து தென் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உதவியாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் கமால் குணரத்ன நியமிக்கப்ப்ட்டுள்ளார்.

இந் நிலையில் அவரின் கீழ் வரும் பொலிஸ் திணைக்களத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய பதவியான பணிப்பாளர் இடமாற்றப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வரும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts