தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வலுவான சான்றுகள் உள்ள 11 கடற்படை அதிகாரிகளைக் கைது செய்யும் முயற்சியிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இறங்கியுள்ளனர்.
எனினும், எந்தவொரு கடற்படை அதிகாரியையும் கைது செய்யக் கூடாது என்று அரசியல் உயர்மட்டத்தில் இருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உறுதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்தக் கடத்தல்கள் கொலைகளில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பான உறுதியான சான்றுகள் குறித்த சாதகமான தகவல்கள் எம்மிடம் உள்ள நிலையில், கடற்படையினரைக் காவலில் எடுப்பது தவிர்க்க முடியாது.
அவர்கள் போர் வீரர்களாக இருந்தாலும், நாட்டில் உள்ள எவரையும் கொலை செய்வதற்கு உரிமையில்லை, இழிவான குற்றங்களில் ஈடுபடுவதற்கு சீருடையின் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்ற உண்மையை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.
இந்த கடற்படையினர், தமது சீருடையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று நம்புகிறேன். ஏற்கனவே கடற்படை லெப்.கொமாண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு அரசியல்மட்டத்தில் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை.
அவ்வாறு நடந்து கொண்டால், குற்றப் புலனாய்வுப் பிரிவின் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள்.
கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கோட்டே நீதிவான், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
கப்டன் டி.கே.ஜே.தசநாயக்க, லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க, லெப்.கொமாண்டர் சுமித் ரணசிங்க மற்றும் கடற்படையினரான, உதய குமார, கே.விக்கிரமசிங்க ஆகியோரே காவலில் வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.